இயல்பானவளே..!

ஜனவரி 11, 2008

 DSC_0147

தன்னை விதைத்து
காதலை
எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்

காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும்

என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்

*

 நீ என்னை மட்டும்
உன்
வசப்படுத்தவில்லை
என் கவி
வாசகர்களையும்தான்

பார்
கவி எழுதிய என்னை
விசாரிக்காமல்
எல்லாரும்
யாருக்காக எழுதியது என்று
உன்னை விசாரிப்பதை

*

எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட

யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்

வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

*

என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்

முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்

ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்

*

என்றும் உன் அருகே
நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம்
கிடைக்காமல் போனாலும்

உன் கால்தடங்கள் தேடியே
ஓடிவரப்போகும் உன்
குழந்தையாகும் வரம்கொடு

அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு

-யாழ்_அகத்தியன்


மொழியானவளே..!

ஜனவரி 10, 2008

 DSC_0056

நான் – உறக்கம்
நீ – கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்

*

என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு

என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு

*

என் சொந்தங்களில் நான் தான்
முதல் கவிவாசகன் என்பதில் சிறிய
கவலை எனக்கு

இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே

*

உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்

உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*

உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்

-யாழ்_அகத்தியன்


மன்னவனே..!

ஜனவரி 8, 2008

காதலனே
எனக்கு எதுவும்
வாங்கிவராதே

முடிந்தால் உன்னை
யார்
கண்ணும் படாமால்
கூட்டிவா

அதுவே போதும் நான்
கவலையின்றி கண்
உறங்க

*

உனக்காக
பிறந்தவள் நான்
என்றதில்

குழந்தையாய் நான்
மகிழ்ந்ததை விட

உன் கவிதையின் கரு
 நான் என்பதிலேயே

தாயாய் நான்
அதிகமாய் மகிழ்ந்தேன்

*
பாவம் என் கன்னங்கள்
 நீ ஆசையாய் கொடுக்கும்

ஒவ்வொரு முத்தத்தையும்
பொத்தி வைத்திருக்க
தெரியாமல்

தடவி பறிக்கும் என் கை
விரல்களிடம் கொடுத்து
ஏமாந்துவிடுகிறது

*

இப்படி என் வீட்டவர
பயப்பிடுவாய் என்று
தெரிந்திருந்தால்

உன் புகைபடத்தை
என் அறையெங்கும் ஒட்டி
வைத்து

என் கோழைத்தனத்தை
வெளியே
அனுப்பியிருக்க மாட்டேன்

*

வெக்கம் கேட்ட
கவிஞன் நீ

என் வெக்கங்களை
கவிதையாக்கியே

என்னை வெக்கப்பட
மட்டும்
வைத்துவிட்டாய்

-யாழ்_அகத்தியன்


உனக்கே உயிரானேன்…!

ஜனவரி 5, 2008

என்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்

உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்

கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்

*

என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

*

உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

*

யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்

எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக

*

என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்

உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

 

-யாழ்_அகத்தியன்


பொங்கலோடு நீ..!

ஜனவரி 5, 2008

உன் பொங்கல் கவிதை
தித்திப்பதற்காகவே
சேர்த்தாயா உன்
சக்கைரைப் பெயரை
இப்படி இனிக்கிறதே

*

தினம் நீ
முறித்து தரும்
கரும்பின் சுவை
அலுத்துவிட்டது

எங்கே
கரும்பொன்றை
கடித்துவிட்டு தா

உன் இதழ் தொட்ட சுவை
அறிய வேண்டும் நான்

*

நீ கண் மூடி வழிபட வழிபட
தன் நெற்றிக் கண்ணையும்
திறந்து பிரகாசிக்கிறான்
சூரியபகவான்

*

சூரியபகவானுக்காய் நீ
போடும் நட்சத்திரக்
கோலத்தோடு உன்னை
பார்க்கும்போது
 
நிலாக்கோலம்தான்
ஞாபகம்
வந்தது எனக்கு

*

எல்லாரும் கண்மூடி
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
நீ பாடிய தேவாரத்தை

நான் மட்டும் கண்திறந்து
கவனித்துக் கொண்டிருந்தேன்
எப்போ பிரியும் உன் இமைகள்
என்று

-யாழ்_அகத்தியன்


செல்லமானவளே..!

ஜனவரி 2, 2008

எல்லோருக்கும்
தை பிறந்தால்தான்
வழி பிறக்கும்

எனக்கு மட்டும் எப்போதும்
தைதான் என் வழியே நீ
என்பதால்

*

வந்துபோகும் நாட்கள் போல்
வந்து போகிறது நீ என்னோடு
இருக்கும் ஒவ்வொரு வருசங்களும்

*

நம் கல்யாண வருசத்துக்காகவே
என் காதல் வருசங்கள் ஒவ்வொன்றும்
நாட்களை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது

*

நான் எழுதாத
கவிதை நீ என்பதிலும்
எனக்கு மகிழ்சியே

ஏனெனில்
என் கவிதைகள்தான்
யார் யாரோ பெயர்களில்
உலகம் சுற்றுகிறதே
*

வருசத்தில் முதல் நாளில்
மட்டும் வாழ்த்த ஆயிரம்
உறவுகள்

வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க நீ

-யாழ்_அகத்தியன்