அகதியாய் நான்…[2]

அக்டோபர் 11, 2007

அண்ணன்
புலம்பெயர்ந்த நாட்டில்
சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்

தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்

*

எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர

*

ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்

*

புலத்தில்
பட்டினி கிடந்து உழைத்தும்
என் குடும்பத்தின் பசியைத்தான்
போக்கமுடிந்தது தூங்கவைக்க
முடியவில்லை

*

புலத்தில்
வயிறு முட்ட உண்டாலும்
வீசவில்லை அம்மாவின்
கைவாசம்

*

நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற

*

அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா என்றாலே இறக்கிறோம்

-யாழ்_அகத்தியன்