உயர்வானவளே…!

மார்ச் 20, 2008

 

 

 

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

*

 என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

*

கவிதை என்று
யார் கேட்டாலும்

உன் பெயர்
சொல்வேன்

உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்

நான் எழுதாத
காவியம்
என்பேன்

*

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்

நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்

*

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்

 

-யாழ்_அகத்தியன்