எங்கே என் உயிர்..!

அக்டோபர் 24, 2007

எப்போதும் குளிரும் உன்
நினைவுகளில் நடு நடுங்கித்தான்
போர்த்துக் கொள்கிறேன் என்னைத்
தினமும் நான்

பாய் விரித்தும் உறங்க முடியாமல்
எனை சுருட்டிக்கொண்டிருக்கிறது
பிரிந்துபோன உனை இமைக்காது
தேடும் என் கண்கள்

நீண்டுகொண்டே போகும் இரவுகளில்
வளரும் நிலவோடு வளர்ந்துகொண்டே
போகும் உன் நினைவுகளை வழி
நடத்துகிறது இந்த பழைய மனசு

காயங்கள் பல கண்டபோதும்
நீ தூங்க புல்லாங்குழலானேன்

வலிதாங்கியே பழகிய என்னை
சுமைதாங்கியாக்கி அழகாய்
ஏறியமர்ந்தாய்

உன்னைச் சுமந்தே
உலகம் சுற்றிவந்தேன்
சுமக்கும் கழுதையாய் நான்

ஓரு நாள் ஏனோ உனை
இறக்கிவிடச் சொன்னாய்
பதறிப்போய் நான்
உன் வீட்டுவாசல் என்பதை
கவனிக்காது பத்திரமாய்
ஏற்றிய அதே கவனத்தோடு
கசங்காமல் இறக்கிவிட்டேன்

இதோ வாறேன் என
உன் வாசல் நுழைந்தாய்
இன்றுவரை நான் உனக்காய்
சிலையானதுதான் மிச்சம்

என்னை பட்டமாக்கி பறக்க
விட்ட காதல் தேவதையே
என்னை நானகவே
விட்டிருக்கலாம் நீ

கசக்கி எறிந்த கவிதையாய்
குப்பை தொட்டியில் கிடந்திருந்தாலும்
இப்பிடி நூலறுந்த பட்டமாய் உன்னிலே
நான் சிக்கிக் கிடப்பதைவிட அது மேல்

சரிவிடு
இனி எப்போதும் என்னைத் தேடி
வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது

இருந்தாலும்
உன் காதல் வார்த்தைகளால்
என் உயிரை எடுத்துப் போனாயே
அதையாவது
யாரிடமாவது கொடுத்தனுப்பு

சிலையாகிப்போன நான்
இறந்து போக வேண்டும்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.