மூச்சே என் முயற்சி…!

அக்டோபர் 9, 2007

உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்

பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்

குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்

அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்

இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்

பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்

கைப்பாசை உதவியோடு ஐந்து
நாள் பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்

விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

ஆனால்…..

என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்

மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.